ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார்.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகியது.
மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான செம்மணியில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம் இன்று முற்பகல் அதே இடத்தில் நிறைவுபெற்றது.
5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்’ எனும் கையொப்பப் போராட்டத்தின் போது வடக்கு – கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த போராட்டத்தின் மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் எனவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
