முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிப பெண் மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்தவர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இது குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க விடயமாக, இதே மூங்கிலாறு பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
