இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
அதன்பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலக குழுவை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட வேளையில், பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத காரணத்தால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
