மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வேளை, வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார்.
ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
