காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டக்களப்பு, குருக்கள் மடம் என்ற பகுதியில் 1990 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை, நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த இந்த நடவடிக்கையானது குரல்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரஊப் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி அன்று புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டும், கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைக்காகவும் சென்று காத்தான்குடிக்கு திரும்பி வரும்போது அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் ஆவணங்களுடன் வந்து தகவல்களை வழங்கினர்.

காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் அப்துர் ரஊப் என்பவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி அன்று புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை கடந்த 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியிருந்தார்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியதையடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply