அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பொருட்டு ‘செயிரி வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள விசேட திட்டத்தை இன்று (01) முதல் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இன்று முதல் 4 நாட்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
‘செயிரி வாரம்’ திட்டமானது “க்ளின் சிறிலங்கா” தேசிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் காண்பது மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுவது இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
