யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கின்றார்.
அதன்படி மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணி, யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனை ஆகியவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதான நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கான திரைநீக்க பலகையில் ‘தேசிய அணியில் சம வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன்’ அமைக்கப்பட்டுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.
இந்த திரைநீக்க பலகையில் ஜனாதிபதி உட்பட எவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
மண்டைதீவை விளையாட்டு நகரமாக மாற்றும் நோக்கில் என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின்கீழ், இலங்கையின் 5ஆவது சர்வதேச கிரிக்கட் மைதானமாக இம்மைதானத்தின் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையால், இலங்கை கிரிக்கட்டுக்கு வழங்கப்பட்ட காணியில் 4 கட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று இம்மைதானம் அமைக்கப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

