நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்- தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பம்!

நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் நோக்கில் ‘கனவு இலக்கு’ என்ற தேசிய திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கையின் ரயில் நிலையங்களை சர்வதேச தரங்களுக்கமமைய நவீனமயப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் தனியார் துறை பங்களிப்புகளுடன் இணைந்த திட்டத்தின் கீழ் 100 ரயில் நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படுகின்றன.

ரயில்வே சேவை புத்துயிர் பெறுவது ‘தூங்கும் ராட்சதனை’ எழுப்புவது போன்றது என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். இது பொது போக்குவரத்தை உயர்தர சேவையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது சுற்றுலாத் துறையையும் ஊக்குவிக்கும். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கடின உழைப்பின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை விரைவான வளர்ச்சியை நோக்கி நகரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய,’Clean Sri Lanka’ செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத், பணிப்பாளர் (ஒருங்கிணைப்பு) தசுன் விஜேசேகர, ஸ்டார் கார்மென்ட்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. சுகுமாரன், ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ புஞ்சிஹேவா, NIO Engineering அழைப்பாளர் லக்மின சமரசேகர முதலான பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply