49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், இதன்போது பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா என்பவர் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் சசிகுமார் ஜெஸ்மிதா என்பவரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் நேரில் சென்று வாழ்த்தியிருந்தார்.
49வது தேசிய விளையாட்டு விழாவானது கடந்த மாதம் காலிமாவட்டத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து இந்த விளையாட்டு விழாவை நடாத்தியிருந்தது.
இதில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் பூதன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருந்தார்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் (03) சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு உடல் உபாதை காரணமாக தற்போது முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சாதனைப் பெண்மணியான ஜெஸ்மிதாவின் உடல்நலன் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
