எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்து நேற்று இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேளையிலேயே 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்ளை பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து மீட்டனர்.
இந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மருத்துவக் குழுவினருடன் கூடிய Bell-412 ஹெலிகொப்டரும் வீரவில விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை கொழும்புக்கு வான்வழி ஊடாக கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளில் உதவ அவை தயார் நிலையில் உள்ளன.
விபத்து இடம்பெற்றபோது மீட்பு பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் விசேட மீட்புக் குழுவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்காணிப்பு நோக்கங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டது.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றிருந்தமையால் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்தது.
இதனால் மீட்பு நடவடிக்கையை இலகுபடுத்தவும், விரைந்த சேவையை வழங்கவும் விமானம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
