முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் நேற்று (05) பிற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மகாவலி அதிகார சபையின் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது அரசியல் அலுவலகம் 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அழிக்கப்பட்டதற்காக, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில், சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷ மீதான வழக்கு கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது கொழும்பு பிரதான நீதவான், அவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் வைத்திய ஆலோசனையின் பேரில் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
