மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது, இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 04ஆம் திகதி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தொழிற்சங்க போராட்டத்தின் முதல் கட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றால், சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
