பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்தார்.
இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வின் போதே பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் அறிவித்தார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி இது குறித்து அவர் இன்று தெரிவிக்கையில்,
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய பொருத்தமாக இல்லை என்றும், உரிய முறையில் இல்லை என்றும் தெரிவித்த சபாநாயகர் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.
இந்தவேளையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார். எனினும் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
