மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்றையதினம் (10) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இடைநிறுத்தப்பட்ட பேரூந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து தினமும் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் நவகிரிநகர் வரையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கு மேலாக திடீரென நிறுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள், எனப் பலரும் இணைந்து வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்னால் பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வெல்லாவெளி பொலிஸார் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு முயற்சித்த வேளையிலும், தமக்கு உடன் தீர்வு வேண்டும் என தெரிவித்து போராட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை,
இந்நிலையில் தமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என கூறி சம்பவ இடத்திற்கு வந்த குறித்த பாடசாலை மாணவர்களின் பாடசாலை அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடன் வெளியேறுமாறும் தெரிவித்தார்.
எனினும் தமது பிள்ளைகள் கடந்த ஒரு வார காலமாக பாடசாலைக்கு செல்லவில்லை. இன்றைய தினமும் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த வேளையிலும், பாடசாலைக்கு செல்வதற்கு பேரூந்து இன்மையால் நாம் பிள்ளைகளை இங்கு அழைத்து வந்துள்ளோம்,
எமது பிள்ளைகள் ஏன் பாடசாலைக்கு வர முடியாது என கேட்க முடியாத அதிபர் போக்குவரத்துக்காக போராடும் எமது மாணவர்களை தடுக்க முடியாது என தெரிவித்து, குறித்த பாடசாலை அதிபருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்படவே, அதிபர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் போரதீவுபற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியதற்கு இணங்க உதவிப் பிரதேச செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினார்.
அதன்படி நாளை முதல் மட்டக்களப்பிலிருந்து நவகிரிநகருக்கான போக்குவரத்து சேவை சீராக இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


