முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றம்- பார்வையிட வந்த பிரமுகர்கள்!

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை வந்துள்ளனர்.

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தற்போது உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்திவரும் நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அவர்கள் அந்தச் சலுகையை இழந்துள்ளனர்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply