ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.
இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தற்போது உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்திவரும் நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அவர்கள் அந்தச் சலுகையை இழந்துள்ளனர்.
