சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் வழியாக 06 பாம்புகளை சட்டவிரோதமாக வௌியேற்ற முயன்ற வேளையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இந்தப் பாம்புகளை கொள்வனவு செய்து, அவற்றை தான் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைத்து நாட்டுக்கு எடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Speckled Kingsnake, Yellow Anaconda, Honduran Milk Snakes, Ball Python உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 06 பாம்புகளை அவர் சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்.

இந்த பாம்புகள் குறித்த பெண்ணால் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான பாம்புகள் நாட்டின் காட்டுப் பகுதிகளில் விடுவித்தால் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதுபோன்ற உயிரினங்களை விமானத்தில் கொண்டு வருவது மிகவும் ஆபத்தான செயல் என்பதுடன், சட்டவிரோதமானது எனவும் எச்சரித்தனர்.

மேலும் விலங்குகளை கொண்டு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளை சுங்க அதிகாரிகள் அழைத்து, இது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, சுங்க விசாரணைக்குப் பிறகு பாம்புகளை மீண்டும் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply