அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கபீர் ஹாசிம் தெரிவு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் கடந்த ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

அதன்படி பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைவர் கபீர் ஹாசிம் கருத்து தெரிவிக்கையில், அரசியல் கருத்து வேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா முதலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply