வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு வங்கித் துறையின் ஆதரவை வழங்குதல் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான ஆலோசனைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் மூலம் வங்கி மற்றும் நிதித்துறையின் செயல்திறனை அதிகரிப்பது, சிறிய மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் புதிய காப்புறுதி முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இந்த அனைத்து முன்மொழிவுகள் குறித்தும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
