உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை- வெளியான அதிர்ச்சி தகவல்!

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றையதினம் (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த வேளையில் துறைசார் அதிகாரி ஒருவரினால் மேற்குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த அதிகாரி தெரிவிக்கையில்,

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 5 பாடசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் குடும்ப விவரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, அந்த மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களாக உள்ளமை தெரியவந்துள்ளது.

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 30 கிராம சேவையாளர் பிரிவுகளில் 5 கிராம சேவையாளர் பிரிவு போதைப்பொருள் தொடர்பான அடையாளப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளது.

இந்த வருடம் தை மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளாக குறிப்பாக பாடசாலை இடைவிலகல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொடர்பு, குடும்ப வன்முறை உள்பட 67 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே குறித்த பிரதேச பகுதிகளில் வழி தவறி செல்லுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு சரியான வழியை காட்டுவதற்கும், ஏனைய மாணவர்களை விழிப்படையச் செய்வதற்கும் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் போது நாடா ளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா கருத்து தெரிவிக்கையி, குறித்த அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை பார்க்கும்போது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.

இதற்கு பொலிசார் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. விரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்றுதெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply