‘தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்’ என என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளங்குமரன் எம்.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும்.
யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர்.
அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால் மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு?
ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி நேற்று (17) மூன்றாவது நாளாக நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்.
நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த வேளையிலேயே அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்.
குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , தியாக தீபத்தின் தியாகத்தை மதித்து அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது என பல தரப்பினரும் தமது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
