மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.
1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது தீவகப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள், மண்டைதீவிலுள்ள சில இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவற்றை சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு முன்னதாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், ஊர்காவற்துறை பொலிஸார் மண்டைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்விற்குத் தேவையான வசதிகள் இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, குறித்த வழக்கை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் பாரப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்றைய தினம் இது தொடர்பான வழக்கு மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் கால அவகாசம் கோரினர்.
இதனையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
