இலங்கையின் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லை- இந்தியத் தூதுவர்!

இலங்கையின் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லை என இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதரகத்தில் நேற்று (17) நடைபெற்ற தமிழ் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லாத போதிலும் இந்தியா மாகாண சபை தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு இந்த மாகாணசபையின் கீழ் முழுமையான பிராந்திய நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்து வருகிறது. அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் விசேடமாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியற் கட்சிகளுக்கிடையில் இது விடயத்தில் ஒருமித்த கருத்துப்பாடு இல்லை.

மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த மாகாண சபை தேவையில்லையென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு இருந்து வருகின்றது.

இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாகாண சபை தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு உறுதியான நிலைப்பாட்டை அறியத்தந்தால், இந்தியா பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply