உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நாம் வழங்கிய உறுதிமொழிகளில் ஒன்றாகும். எனவே அது தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.
இந்நாட்டில் நல்லிணக்கம் என்பது மிக முக்கியம். தமது உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கின்றது என அனைத்து இன மக்களும் உணரும் நிலை ஏற்பட வேண்டும். இதற்காக நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
எந்தவொரு விசாரணைகளிலும் அரசியல் ரீதியில் அரசாங்கம் கையடிப்பதில்லை. அதனால்தான் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில்கூட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்ன செய்யலாம், நல்லிணக்க பக்கத்தில் எவ்வாறு தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி நீதி அமைச்சு கலந்துரையாடல்களை நடத்திவருகின்றது. இவற்றுடன் தொடர்புடைய அலுவலகங்களை வலுப்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாம் இனவாதத்தை தூண்டுவதில்லை. இனவாத அரசியலை நிராகரிக்கின்றோம். இனவாத நோக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. அதனால்தான் அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்- என பிரதமர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
