எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதில்லை- என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அம்பாறை பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெறிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் திருடர்கள், ஊழல்வாதிகள் என்று ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டவர்கள் இன்று ஒரே மேடையில் ஒன்றிணைந்துள்ளார்கள்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாம் ஒருவரை ஒருவர் திருடர் என்று விமர்சித்துக்கொண்டோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதனை மக்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
எதிர்வரும் காலப்பகுதியில் நடைபெறும் தேர்தல்களின் போது தற்போது ஒன்றிணந்துள்ள திருடர்கள் அனைவரையும் ஒருமித்த வகையில் தோற்கடிக்க முடியும்.
திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அரசியல் தீர்மானத்தை இலகுபடுத்தியுள்ளார்கள்.
மக்களின் பிரச்சினைகளுக்காகவா எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். இல்லை, சட்டத்தில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது, எதிர்காலத்தில் தமது அரசியலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்வது என்பதற்காகவே தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதுமில்லை, காலத்தை வீணடிக்க போவதுமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஒன்றிணைந்தவர்களிடமும் ஒருமித்த தன்மை இல்லை.
குப்பைமேட்டை போன்றதாகவே எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றிணைவு காணப்படுகிறது. எதிர்க்கட்சியினர் எதிர்காலத்திலேனும் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் மக்களாணையை விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி பக்கம் உள்ளார்கள் என மேலும் தெரிவித்தோருந்தமை குறிப்பிடத்தக்கது.
