மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்க தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர்.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.
அதன்படி முதல் கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 04ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
