இலங்கை மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பங்குபற்றி இருந்தனர்.

இந்த விஜயத்தின் போது இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றையதினம் (24) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில், அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ​​ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply