ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்தநிலையில் இன்றையதினம் (24) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக்கினால் அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
