திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் ஏனைய மீனவ சங்கங்களும் இணைந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின் போது,
“எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதீர்கள்”,
“கட்டுவலையில் களவு செய்யாதீர்கள்”,
“கட்டுவலைகளை சேதமாக்காதீர்கள்”,
போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 56 இடங்களில் கட்டு வலை மீன்பிடி நடைபெறுகிறது. மேற்படி கட்டுவலையில் இருந்து மீன்களை சிலர் திருடுகின்றனர்.
கணவாய் மீன்களைப் பிடிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் விசேட தூண்டில்களால் கட்டு வலைகள் சேதமடைகின்றன. வலைகள் சேதமடைவதால் கூட்டில் இருக்கும் மீன்கள் வெளியேறி விடுகின்றன.
1935 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக கட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தமது வாழ்வாதாரத்தை அரசாங்கம் பாதுகாத்து திருட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
