முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்பொருட்டு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கு இன்றையதினம் (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு தொடர்பான பல ஆவணங்களை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிக்கு வழங்கியது.
அதன்படி, வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் உத்தரவிட்டார்.
2010 முதல் 2012 ஆண்டு வரையான காலப்பகுதியில் மேர்வின் சில்வா அமைச்சராகப் பணியாற்றிய போது தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக சுமார்150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்துள்ளதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
