குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 07 பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று இரவு (24) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பௌத்த பிக்குகள் புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது நேற்று (24) இரவு 9.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 06 பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலை உச்சிக்கு பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் முன்னேஉடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
