ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று மாலை (25) இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற்திட்டங்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கினார்.
இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற்திட்டத்தைப் பாராட்டிய பொதுச்செயலாளர், அதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்நிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
