மீரிகம பிரதேசத்தில் கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது.
அப்போதைய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார். கடந்த அரசாங்கத்தால் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது மகா சங்கத்தினர் உட்பட சகல மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இறுதியில் இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார்.
‘இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? எந்தெந்த நாடுகளுக்கு இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன?, எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்?. ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?’ என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன.
ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம்,
அன்று நிராகரிக்கப்பட்ட சடலங்களை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகக் காணப்பட்டது.
எனவே ஆட்சியாளர்கள் இதனை மறந்து விடக் கூடாது. நிராகரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்தால் அரசாங்கம் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 7 நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றுடன் ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.
மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
