மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றையதினம் (26) இரவு மக்களின் விருப்பத்திற்கு மாறாக, காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, அதனை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு குழுவை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
எனினும் இதற்கு மாறாக ஜனாதிபதி, மக்களின் எதிர்ப்பையும் கருத்துக்களையும் மதிக்காமல் காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று (26) இரவு 10 மணியளவில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முதற்கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மக்கள் அமைதியாகத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர்களின் எதிர்ப்பை மீறி உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்களும், அருட்தந்தையர்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.
இதன்போது பொலிஸார் பெண்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
அதேவேளை போராட்டக்காரர்களைத் தடுக்க விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தி, ஆயுத முனையில் அவர்களை அச்சுறுத்தி காற்றாலை உதிரிபாகங்களைக் கொண்டு சென்றனர்.
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
