அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொடுள்ள நிலையில், ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயப் பற்றி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், ஊழல் மற்றும் மோசடி இல்லாத ஆட்சியை நிறுவுதல் மற்றும் அரச இயந்திரத்தை செயற்திறனுள்ளதாக்குதல் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்கு அரசாங்கம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்தோடு வெளியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்திற்குள் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கட்டியெழுப்பப்படும் இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில், மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜப்பானில் வசிக்கும் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
