பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவை தமது விருப்பப்படி செலவிட முடியாது என்று தெரிவித்த உதய கம்மன்பில, தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் பணத்தை கட்சி நிதிக்கு அனுப்பி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதில் மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.
எனவே இந்த 160 பேரிடமும் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இன்று நாங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
