பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.
ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
அத்துடன் தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் இருப்பதாகவும், பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
