ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றையதினம் (1) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தந்தை (ஒலுவில்) மற்றும் தாய் (நிந்தவூர்) ஆகியோர் 17 வயதுடையவர்கள் மற்றும் திருமணமாகாத காதல் ஜோடி என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காதல் ஜோடிக்கு பிறந்த குழந்தையை, தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைவிட முடிவு செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, குழந்தையின் தாய் வீட்டில் குழந்தையை பிரசவித்தார்.
இதனை அறிந்த தந்தை, குழந்தையை தான் வளர்ப்பதாகக் கூறி பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் தனது உறவுக்கார பெண்ணை தொடர்பு கொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட குழந்தையை கண்டெடுத்ததாகவும், அதை வளர்க்க முடியுமா எனவும் கேட்டார்.
அந்த உறவுக்கார பெண்ணும் சம்மதித்தார்.
ஆனால் குழந்தையின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் இரத்தம் கசிந்தது.
இதனையடுத்து குழந்தை ஒலுவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது குழந்தை கைவிடப்பட்டதாக கதை பரவியது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
