நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்- கிழக்கில் கறுப்புப்பட்டியுடன் சிறுவர்கள் ஆதரவு!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை (27) நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை (1) மாலை ஐந்தாவது நாளில் நிறைவுக்கு வந்தது.

இதன்போது நேற்றையதினம் (01) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து தீபம் ஏற்றி எதிர்ப்பை வெளியிட்டு தமது ஆதரவை வழங்கினர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் ஒன்று கூடிய சிறுவர்கள், சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறு ஊர்வலத்துடன் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து கரிநாளாக அனுஷ்டித்து தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறவுகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply