பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (03) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க பாதை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜான் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கும்.
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்பு 2011–2012ஆம் ஆண்டில் நீர் சார்ந்த “ஜலதாரா” விமானங்களைத் தொடங்கியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த சேவை இடைநிறுத்தப்பட்டது. இன்றையதினம் மீண்டும் தொடங்கியுள்ள இந்த சேவை சுற்றுலாத் துறைக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.
குறித்த நிகழ்வில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜான் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் முதலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

