தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்ட காரணத்தால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.
அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளது.
விபத்தின் போது சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கவலைக்கிடமாக இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
