35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த காணி விடுவிப்பு!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில்1990 முதல் இராணுவ முகாம் இயங்கிவந்திருந்தது.

இந்தநிலையில் நேற்று (10) இராணுவ முகாமாக இருந்த காணி காரைதீவு பிரதேச செயலாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடமும், தனியார் காணி உரிமையாளர் ஜி. அருணனிடமும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

குறித்த காணியிலேயே ஆரம்ப காலத்தில் காரைதீவு பிரதேச சபை மற்றும் பொது நூலகம் இயங்கியிருந்தன.

எனினும் அந்த பகுதியில் இராணுவ முகாம் அமைந்த காரணத்தினால் அவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு இடவசதி இன்றி சிரமப்பட்டனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களைக் குறைக்கும் பொருட்டு அரசு எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் கீழ் இந்த முகாம் அகற்றப்பட்டது.

எனினும் இதற்கு முன்னர், முகாமை அகற்றி காணியை மீள ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் குரல் எழுப்பியிருந்தனர்.

தற்போது காரைதீவு முகாமில் இருந்த இராணுவத்தினர் கல்முனை முகாமுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்தில் உள்ள சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply