இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் ஹமாஸ் அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்குப் பதிலாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள சுமார் 2,000 பலஸ்தீனியக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இந்த 2,000 பலஸ்தீனியக் கைதிகளில், காசாவிலிருந்து கைது செய்யப்பட்ட சுமார் 1,700 பேர் பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களாக ஐ.நா. கருதுகின்றது. மேலும் சுமார் 250 பேர் ஆயுள் தண்டனை அல்லது நீண்ட காலச் சிறைத் தண்டனையை அனுபவித்து வருபவர்கள் ஆவர்.
அந்த வகையில் ஹமாஸ் அமைப்பிடம் மீதமாகவுள்ள 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளும் இன்று காலை இஸ்ரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் காசா அமைதி மாநாட்டிற்கு முன்பு ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிப்பார் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணயக்கைதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
