மழையால் தாமதமடைந்துள்ள யாழ். செம்மணி அகழாய்வுப் பணிகள்!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் தொடர்ச்சியான மழையால் தாமதமடைந்துள்ளன.

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்றையதினம் (14) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோரப்பட்ட நிதியை, நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு, நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியைச் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன், அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காட்சியளித்தன.

இந்தநிலையில் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், குறித்த இடத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் புதைகுழி அகழாய்வுக்கு கோரப்பட்ட நிதி, நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அகழாய்வுப் பணியைத் தொடர்வதற்காக குறிப்பிட்ட தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply