2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதுள்ள மின்சாரக் கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.
இன்று (14) நடைபெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையானது 2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தத்திற்காக, மின்சார கட்டணத்தை 6.8 சதவீதம் உயர்த்துமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களும் பரிந்துரைகளும் கோரப்பட்ட நிலையில், அந்த செயல்முறை ஒக்டோபர் 8ஆம் திகதி நிறைவடைந்தது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்ததாவது,
மின்சார சபை மற்ற செலவுகளுடன் சேர்த்து 6.8% க்கும் அதிகமான கட்டண உயர்வை எதிர்பார்த்தது.
முந்தைய காலகட்டங்களுடன் தொடர்புடைய சில வகையான சரிசெய்தல்கள் செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் யோசனையாக இருந்தது. இதை நாங்கள் வருமான வேறுபாடு சரிசெய்தல் (revenue adjustment) என அழைக்கிறோம்.
கடந்த காலத்தில் மின்சார கட்டணங்கள் 06 மாதங்களுக்கு ஒருமுறை முடிவு செய்யப்பட்டன. ஆனால், இப்போது காலாண்டு அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருந்தது. கடந்த மூன்று காலாண்டுகளுக்கான இலாபம் சரிசெய்தல் செய்யப்பட வேண்டும். ஆனால், மூன்று காலாண்டுகளின் சரிசெய்தலை ஒரே நேரத்தில் செய்வது பொருத்தமற்றது என ஆணைக்குழு முடிவு செய்தது.
