மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
அந்த விசாரணையின் விளைவாக தான் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை சமர்ப்பித்தார்.
இது குறித்த வழக்கு இன்றையதினம் (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதன்போது மனுஷ நாணயக்கார நாளையதினம் (15) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக, அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
