தெற்கு கடற்கரையில் மிதந்து வந்த பொதிகளில் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள்!

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், மிதந்து வந்த போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று (14) மீட்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றில் 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், ஏனைய 48 பொதிகளில் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருள், 156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin) போதைப்பொருள்,
12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish) போதைப்பொருள் இருந்துள்ளன.

இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில், மூன்று படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த மூன்று படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply