இலங்கைக்கு கடத்தவிருந்த 1,200 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி – சல்லித்தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சம் பெறுமதியான 1,200 கிலோ சமையல் மஞ்சள் மூடைகளை, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் கடற்கரை, இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

சுங்கத்துறை அதிகாரிகள், இத்தகைய கடத்தல் செயல்பாடுகளை கண்காணித்து, அவற்றைத் தடுத்து நிறுத்தி, பொருட்களைப் பறிமுதல் செய்வதோடு, தொடர்புடைய நபர்களையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (14) மதியம், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரை ஓரத்தில் சந்தேகத்திற்குரிய மூட்டைகளைக் கண்டனர்.

அவற்றைச் சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 28 மூட்டைகளில் அடங்கிய சுமார் 1,200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த மஞ்சள், இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சம் பெறுமதியானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியில் கடத்தல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதால், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply