நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில், கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்துவரப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா- சுரேஸ் (33), யாழ் மிருசுவிலை சேர்ந்த தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகியோரே கைது செய்யப்பட்டு நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி தப்பிக்க உதவிய ஜே.கே. பாய் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை (ஜே.கே. பாய்), இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்து பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்து காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி கடவுசீட்டு தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் செவ்வந்தியை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதுடன் ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply