புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருவது,
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தமை தெரியவந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, குறித்த குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.
மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.
அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தமை தெரியவந்தது.
இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்தும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
